கதிரியக்கக் கனிகள்! – ரஃபீக் சுலைமான்.
————————————

“அப்போ ரேடியேஷன் ஆன பழங்களை, காய்களை  நாம் சாப்பிடும்போது நமக்கொன்னும் ஆகாதா?”  என்ற ஆயிஷாவின் கேள்விக்கு …
உனக்குப் படித்த ‘அஸ்ட்ரோநெட்ஸ்’, ‘காஸ்மோநெட்ஸ்’ எல்லோருமே அதுமாதிரி கதிரியக்கத்திற்கு உட்படுத்தப்பட்ட பழங்கள் காய்களைத் தான் சாப்பிடுகிறார்களாம். இதனால், விண்வெளியில் இருக்கும் அவர்கள், உணவினால் ஏற்படும் வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கப்படுகிரார்களாம். என்று சமாளிக்க முடிந்ததே தவிர அச்சமின்றி சொல்லமுடியவில்லை!
இன்னும் தெரிந்துகொள்ளவேண்டும்.

என்ன கதிரியக்கம்?
இந்தியாவில் ஆண்டொன்றிற்கு சுமார் 25,000 கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படுகிறதாம். எதில் தெரியுமா? விளைச்சலுக்குப்பின் போதிய பராமரிப்புக்களின்றி  50% க்கும் அதிகமான உணவுதானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சி  ஆகியவை குப்பைத்தொட்டியில் கொட்டப்படுவதால் ஏற்படும் இழப்புதானாம் அது. அதுமட்டுமன்றி பழம் காய்களில் இருக்கும் நுண்ணுயிரிகள் மற்றும் புழுக்களால் அவை நீண்ட நாள்களுக்குச் சேமிக்க முடியாமல் அழுகிவிடுவதும் கூட மேற்சொன்ன இழப்பிற்குக் கூடுதல் காரணமாம்.

இதைத் தடுக்கும் விதமாக, ரஷ்யாவின் அணுசக்தி கழகத்தின் யுனைடெட் இன்னோவேஷன் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இந்தியாவின் இந்தியன் அக்ரிகல்சுரல் அசோசியேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் அக்ரோ கோ-ஆப் லிட் ஆகிய நிறுவனங்களுக்கிடையே கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

நாடுமுழுவதும் 25 ஒருங்கிணைக்கப்பட்ட கதிரியக்ககூடங்களை அமைப்பது எனவும், முதற்கட்டமாக மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள சோலாப்பூர், ஜலனா, நாக்பூர், புனே, சத்தாரா, சிந்தூர்க் மற்றும் JNPT ஆகிய இடங்களில் மையங்களை அமைப்பது என்றும் முடிவாகியுள்ளதாம்.

உணவு கதிரியக்கமூட்டல் என்றால் என்ன?
ரேடியோ ஐசோடோப்புகள் மூலம், காமா கதிர்களை உருவாக்கிப் பெறப்படும் கோபால்ட்-60 எனும் கதிர்வீச்சு இந்த உணவுதானியங்கள் மற்றும் இறைச்சிகளின் கதிரியக்கமூட்டலுக்குப் பயன்படுத்தப்படுகிறதாம்.  இந்தக் கதிரியக்கம் நேரடியாக எந்தவொரு (உணவுப்) பொருள் மீதும் செலுத்தப்படாமல், அயனியேற்ற முறையில் செலுத்தப்படுகிறது. இதனால், உணவுப்பொருளில் கதிர்வீச்சு பாதிப்பு இருக்காது என்று சொல்லி சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஒப்புதல் வழங்கியிருக்கிறதாம்.

இதன் மூலம் கதிரியக்கமூட்டப்படும் உணவு தானியங்கள் மற்றும் காய்கனிகள் சீக்கிரம் அழுகிப்போவதிலிருந்து காப்பாற்றப்பட்டு நீண்ட நாள்கள், வருடக்கணக்கில் வைத்துப் பயனடையும் வகையில் மாற்றப்படுகிறதாம்.

கடந்த முப்பது வருடங்களாக அமெரிக்காவில் இந்த கதிரியக்கமூட்டல் முறை பயன்பாட்டில் இருந்து வருகிறது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அவ்வாறு உட்படுத்தப்பட்ட பொருள் மீது படத்தில் காட்டியுள்ள பச்சை வண்ண ஸ்டிக்கர் போன்று ஓட்டப்பட்டிருக்குமாம். இந்தியாவில் மேலே காட்டியுள்ள ஆப்பிள் வடிவ மஞ்சள் நிற ஸ்டிக்கர் இருக்கும் என்று தெரிகிறது.

-Rafeeq Sulaiman.

Advertisements