fingerprint-reader

“கள்ள ஓட்டு” – இது தேர்தல் காலத்தில் அதிகமாகப் பேசப்படும் ஒரு சொல்லாடல். உலகத்திற்கே தொழில்நுட்பம் கற்றுக்கொடுக்கும் நம்மால் இதற்கொரு நுட்பம் கண்டுபிடித்துத்தரவியலாதா என்ன?

இன்றைக்கு சாதாரணமாக ஒரு சிறிய நிறுவனங்களிலேயே Bio-metric தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி ஊழியர்களின் கைரேகை, பெயர், அவரது அடையாள எண் ஆகியவைப் பதியப்பட்ட ஒரு நிரல் தயாரிக்கப்படுகிறது. அதன் மூலம் முறையான நபரின் வருகைக்கு அவர் பதிந்துள்ள அடையாளங்களைக் கொண்டு சரிபார்க்கப்படுகிறது. முறையான நபர் எனில் ஏற்றுக்கொள்ளப்பட்டும், வேறு நபர் எனில் சமிஞ்கை ஒலியெழுப்பி மறுக்கப்படுகிறது.

இன்னும் ஒருபடி மேலே போய், தற்போது அந்த நபரின் புகைப்படத்தையும் வெளிக்காட்டும் வண்ணம் இத்தகைய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இவையனைத்திற்கும் மேலாக, உலகத்திற்கே மென்பொருள் எழுதும் நமது மூளைகளைக் கொண்டு நம் நாட்டின் பாதுகாப்புக்கும், நேர்மையான வாக்குப்பதிவு மற்றும் இதரபிற அடையாளத் தேவைகளுக்கும் அவர்களைப் பயன்படுத்தப்போகும் ஆட்சியாளர்கள் எப்போது வரப்போகிறார்கள்?

இந்த தேசத்தின் மக்களின் வரிப்பணத்தில் சுமார் 34,600 கோடி ரூபாய் மதிப்பில் எந்தவொரு ‘டெண்டர்’ இல்லாமல், ஒரு முன்னணி மென்பொருள் நிறுவனத்தின் மூலம் மேற்சொன்ன விபரங்களைச் சேகரித்து இன்னும் துல்லியமாக இருப்பதற்காக கருவிழி வரையிலும் வரைந்து எடுக்கப்பட்டு, ‘ஆதார்’ எனும் திட்டம் கொண்டுவரப்பட்டதே….? அந்த விபரங்களைக் கொண்டு இன்றைக்குள்ள தொழில்நுட்பத்தில், இவர்தான் முறையான வாக்காளர், இவர் இவரின் புகைப்படம் இதுதான். என்று அனுமதிக்கும் வழியில் திட்டம் தீட்டும் தொலைநோக்குப்பார்வை கொண்ட ஆட்சியாளர்கள் எப்போது வரப்போகிறார்கள்?

NIC (National Informatics Centre) எனப்படும் தேசிய தகவல் மையம் சேகரித்து வைத்திருக்கும் இந்தத் தரவுகளைப் பயன்படுத்தி முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் அந்தந்த மாநில தேர்தல் ஆணையத்துடன் பகிர்ந்துவிட்டால், அந்தந்த மாநிலத்தின் மக்கள் அவர்களுக்குரிய அடையாள அட்டையுடன் (கைவிரல் ரேகை சரிபார்க்கப்பட்டு) மாநிலத்தின் எந்த மூலையில் இருந்தாலும் வாக்களிக்க முடியும் என்ற நிலையினை ஏற்படுத்தப் போகும் உண்மையான ‘டிஜிட்டல் இந்தியா’ தரப்போகும் ஆட்சியாளர்கள் வரப்போவது எப்போது?

தேசபக்தி என்பது வார்த்தைகளை முழங்கும் வாயிலில்லை; மக்களின் வாழ்வினை அதன் தரத்தினை உயர்த்திடும் சேவையில் என்பதை உணர்ந்து செயலாற்றிடும் உண்மையான தேசபக்தர்களான ஆட்சியாளர்கள் வரப்போவது எப்போது?

-ரஃபீக் சுலைமான்.

Advertisements