DM

 

கடந்தசில நாள்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகங்களின் பிரதம அமைச்சரும் துபை ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது. ஒரு நீண்டநெடிய கட்டுரையை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில் அமீரகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஒரு அமைச்சரவையினைப்பற்றி் எழுந்த விமர்சனங்களுக்கு அருமையான விளக்கம் கொடுத்திருந்தார்.

என்ன அமைச்சரவை?

மகிழ்ச்சி! ஆமாம் நாட்டுமக்கள் தங்களின் குறைகள் களையப்பட்டு, ஆட்சியில் மக்கள் மகிழ்வோடு இருக்கிறார்களா? இருக்க வேண்டும். அதை அந்தத்துறை உறுதிப்படுத்தவேண்டும். அதற்காக உழைக்கவேண்டும்…. என்று பட்டியல் நீளும்.

முதன்முறையாக அந்தத்துறைகென ஒரு (பெண்) அமைச்சர் இளைய தலைமுறையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டும் இருக்கிறார். இந்த நாட்டின் இளைஞர் நலனுக்கானத் துறை அமைச்சரும் 22 வயது இளைய இரத்தம்தான்.

சரி, சரி… இப்ப சொல்லப்போவதும்,படத்தில் உள்ள நகரமும் துபை அல்ல…. அபுதாபியும் அல்ல….

அது டென்மார்க் நகரத்தின் தலைநகர்.

மகிழ்ச்சி பற்றி சொல்லிக்கொண்டு வரும்போதே டென்மார்க் போய்விட்டேன் என்று நினைக்காதீர்கள். அடுத்ததைப் படித்தால் நீங்களும் டென்மார்க் போகவேண்டும் என்று நினைப்பீர்கள்.

உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான மக்களைக்கொண்ட நாடு டென்மார்க் என்று ஐ.நாவின் அதிகாரப்பூர்வ ஆய்வுக்குழு அறிவித்துள்ளது. இதற்காக இந்தக்குழு 157 நாடுகளில் பயணித்து அங்குள்ள மக்களிடம் ஆய்வு நடத்தியது. ஆய்வின் முடிவில் டென்மார்க் முதலாவது இடத்திலும் ‘புருண்டி’ எனும் நாடு கடைசி இடத்திலும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது? என்று நீங்கள் கேட்கும் கேள்வி கேட்கிறது. அதற்கு முன் ஆய்வுக்குழுவால் கேட்கப்பட்ட கேள்விகளைச் சொல்கிறேன். பிறகு நீங்களே யூகிக்கலாம்.

  • மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் வருமானம் தொடர்பான பொருளாதாரம் சார்ந்த கேள்வி.
  • சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு, அதிகபட்ச வயது
  • சமூக நல்லிணக்கம்.
  • சுதந்திரம்.
  • சகிப்புத்தன்மை / பெருந்தன்மை.
  • ஊழலற்ற நிர்வாகம்.

யூகித்துவிட்டீர்களா?

சரி இந்தப்பட்டியலைப் பாருங்கள்

1. டென்மார்க்

  1. சுவிச்சர்லாந்து
  2. ஐஸ்லாந்து
  3. நார்வே
  4. ஃபின்லாந்து
  5. கனடா
  6. நெதர்லாந்து
  7. நியூசிலாந்து
  8. ஆஸ்திரேலியா
  9. ஸ்வீடன்

அண்ணன் அமெரிக்காவுக்கு பதிமூன்றாவது இடம். சான்சே இல்லை என்கிறீர்களா?

சென்ற ஆண்டு இருபதாவது இடத்திலிருந்த ஐக்கிய அரபு அமீரகங்கள். இந்த ஆண்டு இருபத்தி எட்டாவது இடத்திற்கு இறங்கியுள்ளது. (இப்போது அமைக்கப்பட்டுள்ள அமைச்சகம் அடுத்த ஆண்ண்டில் முன்னேற்றலாம்)

சவூதி அரேபியா 34 வது இடத்திலும் சிங்கப்பூர் 22வது இடத்திலும் இருக்கிறது.
நம் இந்தியா 118 வது இடத்தில் இருக்கிறது. இலங்கை நம்மைவிட கொஞ்சம் மகிழ்ச்சியாக 117 வது இடத்தில் இருக்கிறார்களாம்.

நாமும் மகிழ்ச்சியான இடத்தை ஒருநாள் எட்டுவோம். அதற்கான ஒரு துறையை அமைத்து அதையாள அமைச்சர் வந்தபிறகு அல்ல; குறைந்தபட்சம் மனிதராகப் பிறந்தவர்கள் அமைச்சர்களாக நம்மை ஆளும்போது!

-ரஃபீக் சுலைமான்.

Advertisements