go

“அடேய்… பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்” இது ஏதாவது ஏடாகூடமாகச் செய்துட்டு அதிலிருந்து தப்பிக்க அவிழ்த்துவிடும் பொய்களில் மாட்டிக்கொண்டால், கண்டுபிடித்து அர்ச்சிப்பவரின் சொல்லாடல்… இல்லையா?

அதேமாதிரி இந்தப்பக்கம் இருப்பவரின் மனநிலையறியாது அந்தப்பக்கத்திலிருந்து கதையளப்பவரை எப்படி ‘கட்’ செய்வது? என்று விழிப்பவரிடம் பிறக்கும் ‘ஐடியா’தான், “எனக்கு இன்னொரு அழைப்பு வருகிறது. உங்களைத் திருப்பி அழைக்கிறேன்.” என்று தப்பிப்பதும் நடக்கிறது.

அதுவே நேரில் மாட்டிவிட்டால்? ‘எப்படா இந்த ஆளு நம்மை விடுவான்..’ என்று உள்ளுக்குள் புலம்பித்தீர்க்கிறோம்.  அல்லது புலம்ப வைக்கிறோம். மீறும் பட்சத்தில் பையனுக்கு உடல்நிலை சரியில்லை, பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்று தப்பிக்கும் உத்தி கையாளப்படுகிறது.

இது இங்கு நமக்கு மட்டுமில்லை. எங்கேயுமே அதேநிலைதான் போல, அமெரிக்காவின் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும், தயாரிப்பாளருமாக இருப்பவர் செல்சியா ஹான்ட்லெர். இவரை சந்திக்கவரும் நண்பர்களோ அல்லது அலுவல் ரீதியான சந்திப்பாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தையும் மீறி காலத்தைக் கொன்றுகொண்டிருக்கும் அவர்களிடமிருந்து தப்பிக்க பல சாக்குப்போக்குகளைக் காட்டி ‘எஸ்கேப்’ ஆவதில் நிபுணராம்.

‘என்னதான் சொன்னாலும் சிரிக்கிறார்களே ஒழிய சீரியசா எடுக்க  மாட்டேங்கிறாங்க’ என்ற கவலை அவரிடம் இருந்தது. சரி இனிமேல் பாட்டி சொல்லைத் தட்டக்கூடாது “பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்” அப்படிங்கிற முடிவுக்கு வந்து உட்கார்ந்து யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

உடனே ஒரு மென்பொருள் கம்பெனியை அணுகி விபரத்தைச் சொல்ல, அவர்கள் பங்குக்கு இன்னும் கொஞ்சம் யோசனையைக் கலந்து  சேர்த்து கடைசியில் பிறந்ததுதான் Gotta Go என்ற மொபைல் அப்ளிகேஷன்.

இந்த அப்ளிகேஷன்ல என்ன விசேஷம்னா, ஒருவரைச் சந்திக்க அரைமணிநேரம் ஒதுக்கியிருந்தால், இந்தச் செயலியிடம் (அதாங்க APP) சொல்லிவிடவேண்டும். அவ்வளவுதான், சரியா அரைமணிநேரம் கழித்து உங்களுக்கு  அழைப்பு வரும். (எல்லாம் செட்அப் தான். முன்னரே பதிவு செய்த குரல் ஒலிக்கும்) அதில் பேசுவது போலவும், “ஸாரி அவசரமாகப் வெளியில் போகவேண்டும். எனது மேலாளர் காத்திருக்கிறார்” என்று சொல்லி ‘எஸ்கேப்’ ஆகலாமாம். அல்லது குறுஞ்செய்திகளை  வரிசையாக வரவைத்து, “அய்யோ என் வீட்டின் உள்ளே குரங்கு வந்துவிட்டதாம், (நீங்கள் பதிந்த செய்திதான்) என் பக்கத்து வீட்டுக்காரர் SMS அனுப்பியிருக்கிறார். அவசரமாக வீட்டிற்குப் போகவேண்டும்” என்றும் முகம்சுளிக்காமல் ‘எஸ்கேப்’ ஆகலாமாம்.

இப்போதைக்கு iOS பதிவு மட்டும் ஆப்பிள் (US)ஸ்டோரில் பதிவிறக்கலாம்.

ஹலோ, இது வெறும் ப்ளேடு போடுபவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு மட்டுந்தான். மத்தபடி ஊதியம் தரும் முதலாளிக்கு உண்மையா உழைக்கனும். ஆமாம். இல்லைன்னா, ‘ஏமாற்றாதே ஏமாற்றாதே…. ஏமாறாதே..ஏமாறாதே…”ன்னு பாட்டுச் சத்தம் கேட்கும்..சொல்லிப்புட்டேன்!!!
-Rafeeq Sulaiman.

Advertisements