free

“ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்பது இலாபத்தைக் குறைத்துக்கொண்டு தரப்படுகிறது என்றால், ஏன் இரண்டு பொருள்களை வாங்குவதற்கு நம்மைக் கட்டாயப்படுத்துகிறார்கள்? அதையே ஒரு பொருளுக்கு விலை குறைத்து விற்க மறுக்கும்போது, அது நம்மிடம் இருக்கும் பணத்தை அவர்கள் ஏமாற்றிப் பறிக்கும் யுக்திதானே?” என்று முன்பு ஒருமுறை மகள் கேட்டது நினைவுக்கு வருகிறது.

இலவசம் –  இது ஏமாற்றுவேலை; கேட்டுக்கேட்டு புளித்துப்போன சலித்துப்போன வார்த்தைதானே ?

அனால், இப்ப நீங்க படிக்கப் போகிற ‘இலவசம்’ இனிக்கும்!

நம் பிள்ளைகள் தேர்வுக்கால விடுமுறை முடிந்து பள்ளி திரும்புவார்கள் இல்லையா?  அப்போது அவர்கள் சரியாக நகம் வெட்டியிருக்கிறார்களா? ஒழுங்காக முடி திருத்தியிருக்கிறார்களா? உடை சரியாக இருக்கிறதா? என்று கவனித்து பள்ளிக்கு அனுப்புவோமா? அனுப்புவோம் என்றே வைத்துக்கொள்வோம்!

அதேபோல் அமெரிக்காவில் பிள்ளைகள் விடுமுறைக்காலம் முடிந்து பள்ளி திரும்பும் வேளையில் மேற்சொன்னவைகளை அங்குள்ள உள்ள பள்ளிகளில் சரிபார்க்கிறார்கள். அதனால் அங்குள்ள முடிதிருத்தும் நிலையங்களில் சிறுவர்களின் கூட்டம் அலைமோதுமாம்.

‘இதுதான் தருணமென பணம் சம்பாதிக்கும் சூழலில், மத்திய அமெரிக்காவின் அயோவா மாகாணத்திலுள்ள ட்பியூக் எனும் நகரில் முடிதிருத்தும் நிலையம் வைத்திருக்கும் கோர்ட்னி ஹோல்ம்ஸ் என்பவர் தான் நடத்தும் கடையில் முடிதிருத்த வரும் சிறுவர்களுக்கு இலவசம் என்று அறிவித்துள்ளார். ஆனால் ஒரு நிபந்தனை!

என்ன அந்த நிபந்தனை என்றால், கடையில் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் சிறுவர்களுக்கான கதைப்புத்தகங்களில் தங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து சரளமாக வாசிக்க வேண்டும்.

சிறுவர்கள் KG முதல் ஐந்தாம் வகுப்பு படிப்பவராக இருத்தல் வேண்டும்.

இப்படி சொல்லியவுடன், நான்கு சிறுவர்களில் தொடங்கி, இருபது .. முப்பது .. ஐம்பது என்று சிறுவர் கூட்டம் அலைமோத திக்குமுக்காடிவிட்டார் ஹோல்ம்ஸ்.

கடையிலிருந்த புத்தகங்கள் தீர்ந்துவிட, வந்த சிறுவர்களுக்கு ‘கூப்பன்’கொடுத்து அடுத்தடுத்த நாள்களில் வரச்சொல்லி விட்டார்.

சிறுவர்கள் படிக்கிறார்கள், புத்தகம் பற்றாக்குறை என்றவுடன் தன்னார்வலர்கள் புத்தகங்களைக் கொண்டுவந்து குவிக்கத் தொடங்கிவிட்டனராம்.

இந்த சிறு முயற்சி சிறுவர்களை படிக்கத் தூண்டியிருப்பது மிகவும் மன மகிழ்ச்சியைத் தருவதாக பெருமிதம் கொள்கிறார் ஹோல்ம்ஸ்.

இந்த இலவசம் இனிக்கிறது தானே!
-ரஃபீக் சுலைமான்.

 

 

 

Advertisements