Portraits Of Asylum Applicants

“மோகன் – சித்ரா தம்பதியினரின் பெண் குழந்தைக்கு ‘யூனுஸ்”‘என்று பெயரிட்டனர்.” இது அண்மையில் சென்னையின் பெருமழை வெள்ளத்தில் ஏற்பட்ட  இழப்புகளையும் மீறி அனைவரையும் நெகிழ வைத்த செய்தி.

இதைப் பற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது ஒருவர் சொன்னார், “நன்றிப் பெருக்கால் அந்தக் குழந்தைக்கு முஸ்லீமின் பெயர் வைத்திருக்கலாம். ஆனால், பிற்காலத்தில் சிக்கல் வராதா?” என்றார்.

சரி, ஒருவேளை ‘ஜோனஸ்’ என்பவரால் காப்பாற்றப்பட்டு அவர் பெயர் வைத்திருந்தால் என்றேன். உடனே,”இதுவும் ஒரு கிருத்துவரின் பெயர்தானே?” என்றார். சரி, ‘லோனா’ என்பவரால் காப்பாற்றப்பட்டு அவரின் பெயரை வைத்திருந்தால் என்றவுடன், “இது ரஷ்யனின் பெயர்” என்றார். யோனா? “ம்ஹும் இதுவும் ஒரு யூதப் பெயர்”.

சரி, எல்லா வேறுபாடுகளையும் களைந்து இன்று ஒரே மனித இனமாக, மனிதநேயம் தழைத்திருக்கும் வேளையில் ஒரு சமாதனப் புறாவாகப் பிறந்திருக்கும் இந்தக் குழந்தைக்கு சாந்தி என்று பெயரிட்டால்? என்றவுடன், “இது சரி அழகான பெயர்” என்றார். அரபிச் சொல்லான யூனுஸ் என்பதற்கும், ஹிப்ரு மொழியின் யோனா என்பதற்கும், கிருத்துவப் பெயரான ஜோனஸ் என்பதற்கும் இதே அமைதிப்புறா என்றுதான் பொருள். மொழியும் அதன் ஒலியும்தான் வேறு என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.

மோகன் – சித்ரா தம்பதியினர் ‘யூனுஸ்’ எனும் பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கும் இதே சமகாலத்தில், உலகின் இன்னொரு மூலையான ஜெர்மனியில் தஞ்சமடைந்திருக்கும் அத்நான் –  ஹிந்த் அல் மஹ்தாவி எனும் ஈராக்கிய இஸ்லாமிய தம்பதியினர் தேர்ந்தெடுத்திருக்கும் பெயர் ஏஞ்சலா!

ஈராக்கின் இராணுவத்தில் பணியிலிருந்த கணவனுக்கு பயங்கரவாதிகளால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. நிறைமாத கர்ப்பிணியான மனைவி ஒருபுறம். இதயக்கோளாறுடன் உயிருக்குப் போராடும் நான்கு வயது மகன் முஸ்தபா மற்றொருபுறம். குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழியின்றி அவர்களோடு நாட்டைவிட்டு வெளியேறுகிறார் அத்நான். பதினெட்டு நாள்கள் பல துயரங்களுக்கிடையே பேருந்து, இரயில், படகு என மத்தியகிழக்கு நாடுகள் தொடங்கி ஐரோப்பிய நாடுகள் வரை பயணித்தும் ஒவ்வொரு நாட்டு எல்லையிலும் விரட்டப்படுகிறார்.

பிரசவவலி தொடங்கிவிட, இறுதியாக ஆஸ்திரியாவின் எல்லையில் தஞ்சம் கிடைக்கிறது. “தங்கள் நாடு அகதிகளுக்குப் பாதுகாப்புடன் தஞ்சமளிக்கும்” எனும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கெல் அறிவிப்பு பேராறுதல் கொடுத்திருக்கிறது. அடுத்த சிலமணிநேரங்களில் பிறந்த அழகான பெண் குழந்தைக்குச் சிறிதும் யோசிக்காமல் ஏஞ்சலா என்று பெயர் சூட்டி மகிழ்கின்றனர் (படத்தில் இருப்பவர்கள் தாயும் சேயும்).

“மனிதநேயத்துடன் அகதிகளுக்கு தமது நாட்டில் தஞ்சமளிக்கும் மகாத்மாவான அதிபரின் பெயரை என் மகளுக்குச் சூட்டுவதில் பெருமிதமே!” என்கின்றனர் இந்தத் தம்பதியினர்.

பொதுவாக பிடித்தவர்களின் பெயர்களைத் தம் குழந்தைகளுக்குப் பெற்றோர் சூட்டுவது நடைமுறையில் உள்ளதுதான். குலதெய்வங்களின் பெயர் சூட்டுவர். அந்தத் தெய்வங்களின் தலங்களின் பெயர்களையும் சூட்டுவர். தன்னைக் கவர்ந்த திரை  நட்சத்திரங்களின் பெயர்களையும் சூட்டுவர். தாம் வியந்த வரலாற்று நாயகர்களின் பெயர்களைச் சூட்டுவர். தாம் வியக்கும் சமகால வீரர்களின் பெயரையும் சூட்டுவர். இவையெல்லாம் ஒரு ஈர்ப்பில் ஒட்டப்படும் பெயர்கள். வேண்டுதலினால் வெளிப்படும் பெயர்களாகவும் கூட இருக்கலாம்.

ஆனால், ‘யூனுஸ்’. ‘ஏஞ்சலா’ என்பவை மொழி, மதம், நாடு எனும் எல்லைகளைக் கடந்து மனிதநேயம் எனும் ஈரத்தால் ஒட்டிக்கொண்ட பெயர்கள். இந்த உலகில் இன்னும் மனிதநேயம் எஞ்சியிருக்கிறது எனும் நம்பிக்கையூட்டி எக்காளம் ஊதும் பெயர்கள் என்றாலும் அது  மிகையில்லை.

-ரஃபீக்
Advertisements