சொல் – இது உள்ளத்தில் பிறக்கும் உணர்வின் ஒலி வடிவம்.

’ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்’.

இது தமிழகத்தில் அதிகமாய் அறியப்படும் ஒரு சொல்லாடல்.

வள்ளுவர்கூட,

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும்.

ஒரு சொல்லினால் பிறர்க்குத் துன்பம் தருவதிலிருந்து நீங்கி இனிய சொல்லாக, இன்பம் தரும் சொல்லாக, மனதிற்கு தெம்பூட்டும் சொல்லாக மாறும் போது அச்சொல் வழங்குவோனுக்கும், வழங்கப்பெறுவோனுக்கும் இக்காலத்திற்கும் மறுமைக்கும் இன்பம் தரும் என்கிறார்.

’சரி.. சரி.. சொல்ல வந்ததை சொல்ல வேண்டியதுதானே…’ ங்றது கேட்குது…

1994ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் பனிச்சறுக்கல் போட்டியில் அதிவேக பனிச்சறுக்கு வீரர் டான் ஜான்ஸேன் தங்கம் வென்றார். இந்த வெற்றிக்குப் பின்னால் இருப்பது எது தெரியுமா?

ஒரு ’சொல்’ அந்த ஒரு ’சொல்’ தாங்க…

டான் 12 வயது சிறுவனாய் இருந்த போது ஒரு நகரில் நடந்த சறுக்குப் போட்டியில் கலந்து கொண்டார். அவருக்கு முதலிடம் எட்டாக்கனியானது.

போட்டி முடிந்து கவலைதோய்ந்த முகத்துடன் தந்தையுடன் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது அவர் மனதை, ’தம்மை தந்தை என்ன ‘சொல்’லப் போகிறாரோ??’ என்ற கவலை மட்டுமே ஆட்கொண்டிருந்தது.

தந்தையோ ஒன்றுமே ‘சொல்’லாமல் வீடு வந்து சேர்ந்தார்.

படுக்கையில் உறக்கமில்லாமல் தவித்த டானுக்கு அப்பா வழங்கிய பரிசு என்ன தெரியுமா?

ஒரு ’சொல்’ ……. “ வாழ்க்கை என்பது பனிச்சறுக்கு வட்டத்திற்கும் மேலானது”  என்பது மட்டுமே.

அந்த ஒரு ‘சொல்’  அவரின் தன்னம்பிக்கையினை விரிவாக்கி ஒலிம்பிக்கில் தங்கம் பெற மந்திரச்சாவியாய் மாறியது.

டானின் தந்தையைப் போலவே, நம்மிடமிருந்து ‘சொல்’லப்படும் ஒரு ‘சொல்’

அது நேர்மறையானதோ அல்லது எதிர்மறையானதோ,  ஆக அதன் வலிமை எத்தகையது என்று மட்டும் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.

அதிலும் குறிப்பாக நமது பிள்ளைகளிடம் ‘சொல்’லக்கூடிய ‘சொல்’லில் தான் பொருட்டு இருக்கிறது. அச்’சொல்’லே அவர்கள் யார் என்றும் தீர்மானிக்கின்றது.

சொல்வோமா?

Advertisements