சுனிதா தோமர், வயது 28 – வாய்ப் புற்றுநோயால் அவதியுற்ற அவர் நேற்று
(01-04-2015) காலை காற்றில் கரைந்து போனார்.
ஆண்டுக்கு பத்து இலட்சம் பேர் வாய்ப் புற்றுநோயால் இறந்து போகும் இந்த தேசத்தில், சுனிதா மட்டும் ஏன் பேசப்படுகிறார் இன்று?

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வாய்ப்புற்றுநோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டபின் தான் நோயின் தீவிரம், தன் அறியாமையினால் புகையிலைக்கு அடிமையான துயரம், தன் வாழ்நாள் எண்ணப்பட்டுக் கொண்டிருப்பது இவை அனைத்தையுமே உணர்கிறார். நிச்சயமற்ற வாழ்நாளைக் கொண்டிருந்தும், உடனடியாக புகையிலைக்கு எதிராக தமது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்குகிறார். போராடுகிறார்.

இந்நிலையில், புகையிலைப் பொருள்கள் மீது 40% அளவில் அச்சிடப்படும் எச்சரிக்கைப் படங்களை 85% சதவீத அளவிற்குப் பெரியதாக அச்சிடப் படவேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் மத்திய சுகாதாரத்துறை எடுத்திருந்த முடிவினை 01-04-2015 அன்று அமல்படுத்துவதாய் இருந்த்து.

ஆனால், (பார)தீய ஜனதா எம்.பி. க்கள் 8 பேர் அடங்கிய நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு அனுப்பிய அறிக்கையொன்றில், “இந்தியாவில் நடத்தப்பட்ட எந்த ஆராய்ச்சியும், புகையிலைப் பொருட்களால் புற்றுநோய் வரும் என்பதை உறுதிப்படுத்தவில்லை. வெளிநாடுகளின் 2 ஆய்வுகள்தான் அப்படி கூறுகின்றன. புகையிலையின் காரணமாக மட்டுமே புற்றுநோய் ஏற்படுவதில்லை. ஆகவே புகையிலை மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளில் பெரிய அளவிலான எச்சரிக்கைப் படங்களை அச்சிடவிருக்கும் முடிவை நிறுத்தி வைக்கவேண்டும்” என்று கோரியிருந்தது. இதையேற்றுக் கொண்ட அமைச்சகமும் அம்முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது.

இதை எதிர்த்துதான் சுனிதா தனது கடைசி மூச்சுவரையிலும் போராடினார்.

”என்னைப் போன்ற படிப்பறிவு இல்லாத கிராமவாசிகள் போதிய விழிப்புணர்வு இல்லாத்தால் தான் இதுபோன்ற புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகிறோம். புகையிலைப் பழக்கம் உயிரைப் பறிக்கும் கொடிய நோயைத் தரும் என்பது கூட எனக்குத் தெரியாது. இப்போது நான் அனுபவிக்கும் வலி, வேதனை யாருக்கும் வரக்கூடாது என்று பிரச்சாரம் செய்து எச்சரிக்க முடிவு செய்தேன்.

உலகமே புகையிலைக்கு எதிராக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் வேளையில், மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் காந்தி மற்றும் அவரின் குழு பொறுப்பற்ற ஒரு அறிக்கையினை சமர்ப்பித்து, தடை வாங்கியிருப்பதறிந்து அதிர்ச்சியுற்றேன். பெரிய அளவில் எச்சரித்து விளம்பரம் செய்யும் பட்சத்தில் என் போன்ற அப்பாவிகளைப் பாதுகாக்கமுடியும்” என்று தன் இறுதி மூச்சின் போது இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

முன்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்தபோது, இந்தியாவின் மிகப்பெரிய அந்தஸ்தில் இருக்கும் நடிகர்கள் முதல் பாமரர் வரையிலும், புகையிலை மற்றும் புகையிலையினால் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கத்திலிருந்து விடுபடவேண்டும் என்று அறிவித்து கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் முயன்றார். ஆனால் இன்று அதே அமைச்சகம் சில எம்.பி. க்கள் சொன்னதை வைத்து எச்சரிப்பதிலிருந்து விலகுவதைப் பார்க்கும் போது இது மக்கள் நலன் காக்கும் அரசா எனும் ஐயமே மேலெழுகிறது.

புகையிலைப் பொருள்களுக்கெதிராகப் போராடி, அதற்கான முறையான எச்சரிக்கையினை பெற வேண்டிய நாளன்று தனது உயிரை இழந்துவிட்டார் சுனிதா. இறந்தும் தனது போராட்டத்தைக் கடிதம் வாயிலாக மத்திய அரசோடு தொடுத்துக் கொண்டிருக்கும் சுனிதாவின் கடைசி ஆசை நிரைவேற நாமும் கரம் கொடுப்போம். மக்களின் நலனில் அக்கறையற்ற மக்கள் பிரதிநிதிகளின் அறிக்கைக்கெதிராகப் போர் தொடுப்போம்.

Advertisements