mikki.jpgஅமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சார்ந்தவர் மைக்கேல் ரோஸ்ஸி. இவர் தனது மகன் ஜாக் மகள் விக்டோரியா மற்றும் மனைவியுடன் பாஸ்டன் புறப்படுகிறார்.

மூன்றாம் நிலையில் படிக்கும் அவர்களின் பிள்ளைகளின் பள்ளி முதல்வருக்குத் தங்களின் பயண நோக்கத்தினையும் அவசியத்தினையும் விளக்கி, ஏப்ரல்17, 20 மற்றும்21 ஆகிய தேதிகளுக்கு விடுப்புக் கோரி விடுப்புக் கடிதம் (email) அனுப்பிவிட்டு பயணமாகிறார்கள்.

மைக்கேல் ரோஸ்ஸி’க்கு, பாஸ்டன் மராத்தான் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும்; அதன்இறுதித் தொலைவு வரையிலும் ஓட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. இந்த ஆண்டு அதற்குத் தேர்வாகியும் இருந்தார். இதற்காகக் கடும் பயிற்சிகளையும் எடுத்திருந்தார். குடும்பத்தில் மூத்த நபரொருவர் இறந்துபோயிருந்தும் அந்தத் துக்கத்தினையும் பொருட்படுத்தாது போட்டிக்குத் தயாராகி குடும்பத்துடன் பாஸ்டன் கிளம்புகிறார்.

(பாஸ்டன்மராத்தான் என்பது உலகின் புகழ்பெற்ற ஒரு பழமையான மராத்தாங்களில் ஒன்று. 1897ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் (தேச பக்தர்கள் தினமான) ஏப்ரல்மாதத்தின் மூன்றாவது திங்களன்று தொடங்கும்.  ஏறத்தாழ 30,000 பேர்கள் கலந்து கொள்ளும் பெரு நிகழ்வு)

போட்டியில் கலந்துகொண்டு மனநிறைவுடன் திரும்பிய மைக்கேலுக்கு, பள்ளியிலிருந்து பள்ளி முதல்வர் அனுப்பியிருந்த பதில் மிகுந்த அதிர்ச்சியினைக் கொடுத்தது.

“அன்புள்ளதிரு & திருமதிரோஸ்ஸி,

அண்மையில் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் விடுமுறையில் சென்றிருந்தீர்கள் என்று அறிகிறேன். இந்தக் கடிதம் வாயிலாக  நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புவது என்னவெனில், நமது கல்வி மாவட்டத்தின் சட்டப்படி, நீங்கள் குடும்பத்துடன் விடுப்பில் சென்றதாக அறிவித்துள்ளதை எந்தக் காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள இயலாது. கல்விச் சுற்றுலா போல நீங்கள் உங்கள் விடுமுறையினை அறிவித்திருந்த போதிலும் அதை ஏற்றுக்கொள்ள மாவட்ட கல்வி நிர்வாகம் ஒருபோதும் அனுமதியாது. எனவே  தங்களின் குழந்தைகள் பள்ளிக்கு வராத அந்த நாள்களை  முன் அனுமதியின்றி விடுபட்ட நாள்கள் என்றே எடுத்துக்கொள்ளப்படும்.

“மேலும் இது போன்ற முன் அனுமதியின்றி விடுபட்ட நாள்கள் தொடரும் பட்சத்தில், பள்ளியின் கட்டாய வருகை நாள்களுக்குரிய சட்டத்தினை மீறியதாக அந்தத் துறையின் அலுவலரைச் சந்திக்கப் பரிந்துரைக்க அவசியமேற்படும்”

நேர்மையுடன்,
முதல்வர்

இதற்கு மைக்கேல் ரோஸ்ஸி எழுதிய பதிலைத் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிய, உலகையே ஒருகலக்கு கலக்கி விட்டது. தற்போது பள்ளி நிர்வாகம் அவரைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கிறது.

என்ன அப்படி எழுதினார்?  இதோ….

அன்பிற்குரிய முதல்வரம்மா,

நீங்கள் எங்கள் குழந்தைகளின் கல்வி மீது கொண்டுள்ள அக்கறையினைப் போற்றும் அதேவேளையில் இன்னுமொரு விடயத்தை உங்களுக்கு உறுதியோடு சொல்ல நினைகிறேன். என்னவெனில், உங்கள் பள்ளியில் ஒரு ஆண்டில் எவ்வளவு கற்பார்களோ அதை அவர்கள் இந்த ஐந்து நாள்களில் கற்றிருக்கிறார்கள்.

எங்கள் பிள்ளைகள் அவர்கள் வாழ்நாளில் ஒருமுறை இப்போது கற்றவைகளை, உங்கள் வகுப்பறைகளோ அல்லது அவர்களின் பாடபுத்தகங்களோ ஒருபோதும் கற்றுத்தர முடியாது என்றும் நம்புகிறேன்.

விடுபட்ட நாள்களில் நடந்த தேர்வுகளை நீங்கள் எப்போதும் எந்நேரத்திலும் நடத்திக் கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கு எளிதில் கிடைக்காத அர்ப்பணிப்பு, பொறுப்பு, விடாமுயற்சி, துன்பத்திலிருந்து மீளுதல், குடிமையின்பெருமை, நாட்டுப்பற்று, நாட்டின் வரலாறு, சமையல் கலை மற்றும் உடற்கல்வி என அனைத்துவகையான பயிற்சிகளையும் ஒருசேரக் கற்றிருக்கிறார்கள்.

தான் நிர்ணயித்த ஒரு குறிக்கோளுக்காக, அதை அடைவதற்காக எடுக்கப்படும் முயற்சியின்போது எதிர்கொள்ளும் தடைகள், காயங்கள், மோசமான தட்பவெட்பம், நேசதிற்குரியவரின் இழப்பு என்ற அனைத்தையும் விட, தான் கொண்ட இலக்கினை அடைய தங்களது அப்பா எவ்வளவு அர்ப்பணிப்போடு உழைக்கிறார் என்பதைக் கவனிக்கிறார்கள். இதுபோன்று உழைப்பவர்களை எவ்வாறு மற்றவர்கள் ஊக்குவிக்கிறார்கள் என்பதையும் நேரடியாகவே பார்த்துக் கற்றுக்கொள்கிறார்கள்.

மேலும் இந்த உலகப்புகழ் மராத்தான் ஓட்டத்தில், கண்பார்வையற்றோர், செயற்கை உறுப்புகளைக் கொண்டோர் மற்றும் உடல் பலவீனமுற்று நோய்வாய்ப் பட்டோர்களும் கலந்துகொண்டு ஒரு உன்னத நோக்கத்திற்காக ஓடி நிதிதிரட்டும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வினைக் கண்டார்கள்.

அதுமட்டுமன்றி, மனிதநேயமற்ற தீவிரவாதச் செயல்களினால் பாதிக்கப்பட்டோருக்கு, பலியானோருக்கு அஞ்சலி செலுத்தினர். எந்தவொரு தீயசக்தியும் நாட்டின் இறையாண்மையினை ஏதும் செய்துவிட முடியாது என்றும் தெரிந்துகொண்டனர்.

மேற்சொன்ன எந்தவொரு விடயத்தையும் அவர்கள் வகுப்பறையில் எப்போதும் கற்றுக்கொள்ளஇயலாது.
அனைத்திற்கும் மேலாக, சுதந்திர நினைவு நடை (4.0 கி.மீ ) நடந்திருக்கிறார்கள். பாஸ்டன்டீ பார்டி நினைவகம் ( நம்ம வரலாறுபுத்தகத்தில் செவ்விந்தியப் போர் படித்த ஞாபகம் வருகிறதா?), பாஸ்டன் படுகொலை நடந்த இடம் மற்றும் சுதந்திரப் பிரகடனத்தில் கையொப்பமிட்டு உயிர்நீத்த தியாகிகளின் கல்லறைகள் ஆகியவற்றையும் பார்த்து வந்திருக்கிறார்கள்.

இவையெல்லாம் பள்ளியின் மூலம் கற்க ஆண்டுகள் பல ஆகும்.
மேலும் அவர்களுக்கான பொழுதுபோக்காக, நடைப்பயிற்சி, நீச்சல், கடல்வாழ் உயிரினக் காட்சியகம், ருசியான உணவு என்று மகிழ்வுற்றனர்.

எங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியினை மிகவும் விரும்புகிறோம். அங்குப் பயிலும் மாணவர்கள் மீது அளவிலா அன்பு கொண்டு போதிக்கும் ஆசிரியர்களையும், ஊழியர்களையும் மற்றும் குழந்தைகளின் கல்வியின் மீது அவர்கள் காட்டும் அக்கறையினையும் பெரிதும் மதிக்கிறோம்!

இருப்பினும், கடந்த வாரத்தில் கிடைத்தது போல ஒரு அரிய நிகழ்வு /வாய்ப்பு குழந்தைகளுக்கு கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் அவர்களைப் பள்ளியிலிருந்து அழைத்துச் செல்ல ஒருபோதும் தயங்கமாட்டேன்.

பொறுமையுடன் படித்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன்.

நேர்மையுள்ள,

மைக்கேல் ரோஸ்ஸி

தந்தை

( இது தொடர்பான எனது முந்தைய பதிவில், பள்ளி நிர்வாகத்தோடு ஒத்துப்போவதே சிறப்பு என்று அநேகமானோர்  கருத்து தெரிவித்திருந்தனர் )

Advertisements