அப்வழக்கம் போலவே இந்த வாரத்திற்கான பெற்றோர் சந்திப்புக்கூட்டம் தொடங்கியது.

பூங்காவில், குழந்தைகள் அவர்களின் விளையாட்டு உலகில் சஞ்சரிக்க,  பெற்றோர்கள் ஒவ்வொருவராக தங்களது குழந்தை வளர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தனர். இப்போது ஆயிஷாவின் பெற்றோர் பேச வேண்டும்.

ஆயிஷாவின் அப்பா மைக் முன் வந்தார்.
”எனக்கு இதுபோல பப்ளிக்ல பேசி பழக்கமில்லை….  இருந்தாலும் எனக்குத் தெரிஞ்சத உங்களோட பகிர்ந்துக்கிற ஆசைப்பட்றேன்.

எல்லோருக்கும் இந்த மாலைப் பொழுது இனிதாய் அமையட்டும் என்று ஆரம்பிக்கிறேன்”

எல்லோரும் அவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு அவரின் பேச்சைக் கேட்க ஆர்வமாயினர்.

“பொதுவா நம்ம குழந்தைகளுக்கு ட்ரெஸ் எடுக்கணும்னா, நல்ல கடைக்குப் போவோம் இல்லையா?”
“குழந்தைகளை அழைச்சுகிட்டு வெளியே சாப்பிடப் போகனும்ன்னு நினைச்சா கூட, உடனே ஒரு நல்ல ஹோட்டல்தானே நம்மோட தேர்வா இருக்கும்? சரி, ஸ்கூல்? அட அதுக்குத்தானே சிட்டியிலேயே பெஸ்ட் ஸ்கூல்ல அட்மிஷனுக்கு அலையுறோம்.

சரி, அதேமாதிரி நம்ம குழந்தைங்க பார்க்குற கார்டூன் பத்தி என்னைக்காவது யோசிச்சிருக்கோமா? இவையெல்லாம் நம்ம குழந்தைகளுக்கு நல்லதா கெட்டதா அப்படின்னு என்றாவது சிந்திச்சு இருப்போமா?

குழந்தைங்க சேனலில் குழந்தைகளுக்காக ஒளிபரப்பப்படும் கார்டூன்ல என்ன நல்லது கெட்டது ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கு அப்படின்னுதானே நினைக்கிறீங்க?

அமெரிக்காவின் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் குழந்தைகள் உளவியல் பேராசிரியர் நடத்திய ஒரு ஆராய்ச்சியின் முடிவைக் கேட்டா அசந்துபோவீர்கள்.

நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அறுபது பேரை மூன்று குழுக்களாகப் பிரித்து, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மூன்று வகையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் கொடுத்தனர்.

நம் பிள்ளைகளெல்லாம் பார்ப்பது போல மின்னல் வேகத்தில் அசத்தும் கதாபாத்திரங்கள் கொண்ட கார்டூன் பார்ப்பது ஒரு குழுவுக்கும் , தரமான கார்டூன் பார்ப்பது இன்னொரு குழுவுக்கும், மற்றும் ஓவியம் தீட்டுதல் என்று மூன்றாவது குழுவுக்கும் கொடுத்தார்கள்.

சிறிது கால அவகாசத்திற்குப் பிறகு அந்தக் குழந்தைகளை அழைத்து, அவர்களின் இயக்கச் செயல்பாடுகளில் மாற்றம் இருக்கிறதா? என்று சோதித்தனர். குழந்தைகளின் அறிவாற்றல் திறன் மற்றும் உணர்ச்சிக் கட்டுப்பாடு ஆகியவைகளைச் சோதிப்பதற்காக எண்களை கீழிருந்து மேலாக சொல்லும்படியும், புதிர்களைத் தீர்க்கும்படியும் மற்றும் அவர்களுக்குப் பிடித்தமான உணவுப்பொருளை முன்னால் வைத்து, எடுத்துக்கொள் என்று சொல்லும் வரையிலும் பொறுமையுடன் காத்திருக்கிறார்களா? என்பது போன்ற சோதனைகளையும் மேற்கொண்டனர்.

இதில், தரமான கார்ட்டூன் பார்த்த குழந்தைகள் மற்றும் ஓவியம் தீட்டிய குழந்தைகளைவிட, நம்குழந்தைகள் பார்ப்பது போன்ற வேகமாக ஓடக்கூடிய கார்டூன் படத்தைப் பார்த்த குழந்தைகளின்  செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லையாம்.

ஆமா அது என்ன தரமான கார்டூன்? இதுதானே உங்க கேள்வி?

டெக்னிக்கலா சொல்வதாய் இருந்தால், ஒரு வளரும் குழந்தை தன் முன்னே தோன்றும் காட்சியினைப் புரிந்துகொள்ள குறைந்தபட்சம் சில விநாடிகள் தேவைப்படும். வெளிநாடுகளில் தரமான கார்டூன், அதாவது ஒருநிமிடத்திற்கு, இரண்டு முறை மட்டுமே காட்சிகள் மாற்றப்படும் வகையில் தயாரிக்கப்படும் கார்டூன்களையே தரமான கார்டூன் என்கின்றனர். அவைகளையே  குழந்தைகளுக்கும் பரிந்துரைக்கின்றனர்.

இன்றைய பெரும்பாலான கார்ட்டூன்கள் நிமிடத்திற்கு ஐந்து காட்சிகள் மாறுவது போலவும், கதாபாத்திரங்கள் மிகவும் வேகமாய் நகர்வது போலவே தயாரிக்கப்படுகிறது. தயாரிப்பு செலவு குறைவு என்பதால் இதுபோன்ற கார்டூன்கள் இங்கு தெரிவு செய்யப்படுகிறது. நம்பிள்ளைகளை ஈர்ப்பது போன்ற உத்திகளும் கையாளப்படுகிறது.

இதுபோல குறைந்தபட்ச நேர அவகாசம் இல்லாமல் வரும் காட்சி மாற்றங்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், சிறு குழந்தைகளின் மூளை சோர்வடைகிறதாம். இதனால் கவனச்சிதறல், வெற்று எண்ணம், சிந்திக்கும் திறன் குறைதல், உணர்ச்சிவசப்படுதல் போன்ற குறைகள் ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது.

எனவே,, குழந்தைகளின் மூளை நரம்புகளின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியுறும் இளம் வயதில், அதன் செயல்பாட்டைத் தடுக்கும், குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் அறிவுத்திறனையும் அழிக்கும்படியான  வேகமாக ஓடும் கார்ட்டூன்களைத் தவிர்த்து, சிறந்தவைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து ஆரோக்கியமான அறிவில் சிறந்த குழந்தைகளை உருவாக்குவோம். அமைதிப் பூங்காவில்வாழ வைப்போம்.” என்று அவர் முடித்தார்.

ஆழமான சிந்தனையுடன் கேட்டுக்கொண்டிருந்த அனைத்துப் பெற்றோர்களும், அவர் சொன்னதை ஆமோதிக்கும் விதமாக, பலமான கைதட்டலுடன் ஒன்றிணைந்து ஒருமனதாய் உறுதியேற்றனர்!

Advertisements