sk‘ஸ்டேடஸ்’ போட்டுவிட்டு சும்மா ஐந்து நாள்கள் காத்திருந்தேன்.

என்னதான் சொல்கிறார்கள் பார்ப்போமே என்ற ஆவலில்!

ஆனாலும், உள்பெட்டியில் சரவெடிகள்!

ஒருவர் சொன்னார், “ உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கல, ஆனாலும் தயங்கியே தான்ங்க லைக் போட்டேன்.”

இன்னொருவர் சொன்னார், “ என்ன ஆச்சு உங்களுக்கு? நல்லாதானே எழுதிக்கொண்டு இருந்தீர்கள்?”

மூன்றாமவர் சிவகாசி போல, “ ஏங்க அஞ்சு செ.மீ., டயலாக் பேச 50 டேக் வாங்குபவரெல்லாம் ஆளுமையா? பிரம்மிக்க என்னங்க இருக்கு இவர்களிடம்?? ஏதாச்சும் உருப்படியா எழுதுங்க!!”

அதுமட்டுமன்றி, சாதாரணமாய் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போகும் நட்பு வட்டத்திலிருக்கும் சிலபல ஆசிரியப் பெருந்தகைகளெல்லாம் கூட ‘ஆப்ஸென்ட்’!

ஆக, ஒரு பெயரை மட்டும் வைத்து முடிவினை இறுதி செய்வதில் இன்னும் தீர்க்கமாய் இருக்கிறோம் என்பது மட்டும் உறுதியானது.

சரி, யார் இந்த சல்மான் கான் – பிரம்மிக்க வைக்கும் ஆளுமை? பார்க்கலாம்.

‘அதற்கெல்லாம் கொடுப்பினை வேணும்!” என்று நம்ம ஊரு பணக்காரப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களைக் கடக்கும் நம்மிடம் வந்து, “ஏம்பா ’பில்கேட்ஸ்’ன் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறாயா?” என்று யாராவது கேட்டால் எப்படி இருக்கும்??

சாத்தியமில்லைதான். ஆனால், ’பில்கேட்ஸ்’ன் பிள்ளைகளுக்கு ட்யூஷன் எடுக்கும் ஆசிரியரே, நமது பிள்ளைகளுக்கும் நம் வீட்டிற்கே வந்து ட்யூஷன் எடுக்க சம்மதித்தால்? அதுவும் எந்தக் கட்டணமும் இல்லாமல் சொல்லித்தருகிறார் என்றால்??

”இந்தக் காலத்துல யாரு சார் அது? அவரு பெயரைச் சொல்லுங்க” அப்படின்னு சொல்வோம்ல்ல….

அவர் பெயர் தான்ங்க சல்மான் கான்.

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் வசித்துவரும் டாக்டர். ஃபக்ருல் அமீன் கான் (பங்களாதேசத்தைச் சார்ந்தவர்), மஸூதா கான் (இந்தியாவைச் சார்ந்தவர்) என்ற பெற்றோருக்கு, அக்டோபர் 11, 1976 ம் ஆண்டு பிறந்தவர் சல்மான் கான்.

லூசியானா மாநிலத்திலுள்ள மெட்டோரி நகரில் இவரின் பள்ளிப் படிப்புத் தொடர்ந்தது. இவருடன் பள்ளியில் படித்தவர்களின் கதையினைக் கேட்டவுடன் தான், பிள்ளைகளுடன் பழகுபவர் எப்படி இருந்தாலும், பிள்ளைகளுக்கு நாம் என்ன உள்ளீடு கொடுக்கிறோமோ அதுவே அவர்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பது மேலும் உறுதியானது.

ஆம், கான் உடன் படித்தவர்களில் சிலர் யாரெனில், சிலபல குற்றங்களுக்காக சிறைச்சாலை சென்று வந்தவர்கள், மேலும் சிலரோ குற்றப் பிண்ணனி காரணமாக மேற்படிப்பிற்காக புகழ்பெற்ற பல்கலைக்கழங்களில் சேர்வதற்குத் தகுதியிழந்தவர்கள்.

இந்நிலையில், சல்மான் கான், பள்ளிப் படிப்பினை முடித்து தேர்ச்சியுற்று, புகழ்பெற்ற MIT ( Massachusetts Institute of Technology ) கல்லூரியில், இரட்டை இளங்கலை அறிவியல் பட்டம் பெறும் முயற்சியில், கணிதம் மற்றும் மின்னியல் / கணினி அறிவியல் பயில அனுமதி கிடைக்கிறது. அதை முடித்தவுடன் முதுநிலைப் பொறியியல் பட்டம் மின்னியல் மற்று கணினிப் பாடத்தில் பெறுகிறார்.

சில ஆண்டுகள் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்த கான், பிறகு, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து MBA முடிக்கிறார். ஒரு தனியார் முதலீட்டு நிறுவனம் இவருக்கு நிதி ஆய்வாளர் என்ற பதவியில் அமர்த்துகிறது. அந்த வேலையில் அமர்ந்த வேளையில் தான் நமக்குத் தேவையான ஆசிரியராக கான் உருவாகிறார்.

2003ம் ஆண்டின் இறுதிவாக்கில், தொலைவில் வசிக்கும் தன் ஒன்றுவிட்ட சகோதரிக்கு கணக்குப் பாடத்தில் ஏற்பட்ட சந்தேகத்தினை தீர்ப்பதற்காக, அன்று யாஹூ கொடுத்த Doodle (கரும்பலகையில் எழுதுவதைப் போன்ற) சேவையினைப் பயன்படுத்தி சொல்லிக் கொடுக்கிறார், இது தினந்தோறும் தொடர்கிறது. அவர் சொல்லிக் கொடுக்கும் பாங்கு, எளிமையான முறை ஆகியவை எல்லோருக்கும் பிடித்துவிட நண்பர்கள், உறவினர்கள் என பயனாளர் எண்ணிக்கை அதிகரிக்கிறது

பிற்காலங்களிலும் இந்தப் பாடங்கள் மற்றவருக்கும் பயன்பெற வேண்டும் எண்ணம் அவருக்குத் தோன்றவே, சொல்லித்தரும் பாடங்களை வீடியோக்களாக சேமிக்கப்படவேண்டும் என்று திட்டமிடுகிறார். YOUTUBE கணக்கை 2006ம் ஆண்டின் இறுதியில் தொடங்கி அனைத்துப் பாடங்களையும் சேமிக்க ஆரம்பிக்கிறார்.

நாளுக்கு நாள் அமோக வரவேற்பு, பாராட்டு என்று அவரின் உழைப்பிற்கு அங்கீகாரம் அதிகரித்துக் கொண்டிருந்த வேளையில் ஒருநாள், தன் மனைவியிடம் “ இந்த சமுதாயத்திற்கு என்றென்றும் உயரிய பலனைத் தரும் ஒரு பணியைச் செய்யப்போகிறேன்!” என்று சொல்ல, கணவரின் முடிவை முழுமனதோடு அவர் வரவேற்கிறார்.

2009ம் ஆண்டு, ‘நிதி ஆய்வாளர்’ பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு. தனது நெடுங்கால நண்பரான ஜோஷ் ஜெஃப்ர் உதவியுடனும், அமெரிக்காவின் பிரபல முதலீட்டாளர் ஜான் டீஎர் அவர்களின் மனைவியான ஆன் டீஎர் என்பவரின் நிதி ஆதரவுடன் முழுநேர YOUTUBE CHANNEL மற்றும் KHAN ACADEMY நிறுவப்படுகிறது.

சில ஆண்டுகளிலேயே உலகத்தின் பல மூலை முடுக்கெல்லாம் இச்சேவை பற்றிய செய்தி பரவுகிறது.

சல்மான் கானின் அறிவார்ந்த செயல்முறை விளக்கத்துடன், இலகுவாக, எளிதில் புரியும் படியாக, ஒன்றிற்கும் மேற்பட்ட வழிமுறைகளைக் கையாளும் உத்தியில் அசந்து போய் கற்றுக்கொண்ட அல்லது கற்று பின் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்த 458 மில்லியன் பார்வையாளர்களுள் நானும் ஒருவன் தான்.

‘இணையத்தில் இலவசப் பள்ளி’ என்ற தனது அடுத்த திட்டத்தில், அனைவருக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பயணிக்கும் கான், அரிச்சுவடி முதல் அண்டவியல் வரையிலான கணிதப் பாடத்தையும் தாண்டி, ஆங்கிலம், மருத்துவம், கணினி மென்பொருள், வேதியியல், உயிரியல், இயற்பியல், பொருளாதாரம், நிதி, என்று பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்கிறார்.

20 இலட்சம் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள இவரது சேனல் இதுவரையிலும் 49 கோடி (மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என்ற) பார்வையாளர்களோடு நித்தம் வளர்ந்து கொண்டிருக்கிறது

ஒரு சந்திப்பின் போது, மென்பொருள் ஜாம்பவான் என்று அறியப்படும், பில்கேட்ஸ் தனது பிள்ளைகள் ‘கான் அகாடமி’ தரும் மென்பொருள்பயிற்சியில் படித்து வருகிறார்கள் என்று பெருமையுடன் கூறி பாராட்டியிருக்கிறார்.

‘டைம்ஸ்’ பத்திரிகை உலகப் புகழ் பெற்ற 100 பேர்களில் இவரையும் ஒருவராக 2012ம் ஆண்டு அறிவித்தது.

”எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.”

எனும் வள்ளுவன் வாக்கு போல, தான் கற்ற எண்ணையும் எழுத்தையும் வாழும் உயிர்களுக்கு கண்ணாகத் தரும் இவர் பெற்றுள்ள பாராட்டுக்களையும், விருதுகளையும் பட்டியலிட ஆரம்பித்தால் இன்னும் குறைந்தபட்சம் ஒரு பத்து பக்கத்திற்கு எழுதவேண்டியிருக்கும்.

என்னைப் பொருத்தவரை இன்றளவும் இந்த சல்மான் கான் – பிரம்மிக்க வைக்கும் ஆளுமையாக உயர்ந்து நிற்கிறார்!

உங்களுக்கு?

http://www.youtube.com/user/khanacademy

Advertisements