priyankaமுகநூலில் மட்டுமல்ல என்னால் முடிந்தவரையிலும் முகத்திற்கு நேராகவும் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டேன்.இந்தப் பெயரில் உள்ள எல்லாப் பிரபலங்களையும் தெரிந்திருப்பவர்களுக்கு, பிரபலப் படுத்தவேண்டிய இவரைத் தெரிந்திருக்கவில்லை.

சிலநாள்களுக்கு முன்பு ஒரு அமெரிக்கப் பேச்சாளரின் பேச்சின் மூலம் தான் எனக்கும் இந்தப் பிரியங்கா தெரியவந்தார்.

சரி, கல்யாணக்கோலத்தில் இருக்கிறாரே? ஆம் திருமணத்திற்கு அடுத்த நாளே கணவன் வீட்டிலிருந்து பிறந்தவீட்டிற்குத் திரும்பிய பிரியங்காவை இரண்டு மாதங்கள் கழித்து அழைத்து வந்தபோது ஊரே திரண்டு உற்சாகமாய் வரவேற்றபோது எடுத்த படமாம் இது.

கோபித்துக்கொண்டு போனவரை ஊர்கூடி அழைத்ததா? அப்படி என்ன செய்துவிட்டார் என்று வியப்பாய் இருக்கிறதல்லவா?

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிரியங்கா, தனது 19ம் வயதில் (2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி) உத்திரப்பிரதேசத்தின் கொரக்பூர் மாவட்டத்தில் உள்ள விஷ்னுப்பூர் குர்து கிராமத்தைச் சேர்ந்த அமர்ஜித் என்பவரை மணக்கிறார்.

மணநாளின் மறுநாள் அதிகாலை நான்கு மணி. அறைக்கதவு தட்டப்படுவதறிந்து, பிரியங்கா கதவைத் திறக்கிறார்.வாசலில் நின்றிருந்த் மாமியார், “பிரியங்கா, பொழுது புலர்வதற்குள் காட்டுப் பக்கம் போய்க் காலைக்கடன்களை முடித்துவிடு.” என்கிறார்.“என்னது காட்டுப்பக்கமா?, இந்த இருட்டிலா?.. எனக்குப் பயமாக இருக்கிறது. நான் டாய்லெட்டி…..” முடிப்பதற்குள் மாமியார் இடைமறித்து,”அதெல்லாம் இங்குக் கிடையாது. நாங்களெல்லாம் காட்டுப்பக்கம் தான் போவோம். சீக்கிரம் போய்வா “ என்று கட்டளையிடுகிறார்.

செய்வதறியாது நின்றிருந்த பிரியங்கா, விடிந்ததும் கணவனை அழைத்து, “நீங்கள் எப்போது உங்கள் வீட்டில் கழிப்பறை கட்டுகிறீர்களோ, அப்போது வந்து என்னை அழைத்து வாருங்கள். நான் என் அம்மா வீட்டிற்குப் போகிறேன்” என்று கிளம்பிவிட்டார்.

அந்த அமெரிக்கப் பேச்சாளர்,.

’இது போன்ற இருள்நேரத்தில் பெண்கள் காட்டுப்பகுதிக்குச் சென்றால், குடிகாரர்களின் தொல்லை, விசப்பூச்சிகளின் பயம் மற்றும் அம்மாநில அமைச்சர் ஒருவரே சொன்னது போலக் கற்பழிப்பு போன்ற கொடுஞ்செயல்கள் நடப்பதற்குக் காரணியாய் அமைந்துவிடுகிறது. மேலும் இந்தியாவில் ஒரு சராசரி கிராமத்துப் பெண் கழிப்பறை இல்லாத காரணத்திற்காகக் கணவன் வீட்டை விட்டு வெளியேறுவது இதுவரை நடந்திராத ஒன்று என்று சொன்னதை இங்கு நினைவுகூற வேண்டியது அவசியமாகிறது.

இந்தச் சம்பவம் ஊர் முழுக்கப் பரவ ஆரம்பிக்கிறது. பேசப்படுகிறது.

வடஇந்தியப் பகுதிகளில் சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தரும் ‘சுலப் இன்டர்நேஷ்னல்’ என்ற அமைப்பு இந்தச் செய்தியினை அறிந்து, உடனடியாக அந்தக் கிராமத்திற்கு வருகிறது. பிரியங்காவின் வெளிநடப்பு உத்தியை வெகுவாகப் பாராட்டி, அவரின் வீட்டோடு ஒரு கழிப்பறையினைக் கட்டிக் கொடுத்தது. மேலும் இது போன்ற ஒரு புரட்சியான வெளிநடப்பு செய்து கிராமத்தில் கழிப்பறையின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்காக ரூபாய் இரண்டு லட்சம் பரிசும் வழங்கிக் கௌரவித்திருக்கிறது.

”இப்போது பிரியங்கா, வீட்டுவேலைகள் போகக் கிடைக்கும் நேரத்தில், கிராமத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள் இதுமட்டுமன்றி அருகில் உள்ள வேறுபல கிராமங்களுக்கும் சென்று கழிப்பறையின் அவசியம், சுகாதாரத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார். இவரது முயற்சியினால் கிராமத்தில் நிறைய பேர் வீட்டோடு கழிப்பறையினை அமைத்திருக்கிறார்கள் . ’சுலப் இன்டர்நேஷ்னல்’ அவரைத் தனது விளம்பரத் தூதுவராக நியமித்திருக்கிறது. நேரம் கி்டைக்கும் போது நானும் அவருடன் சென்று உதவிபுரிகிறேன்” என்று பெருமையுடன் சொல்கிறார் பிரியங்காவின் கணவர் அமர்ஜித்!

”இனிவரும் காலங்களில் பஞ்சாயத்துத் தேர்தல் முதல் பார்லிமெண்ட் தேர்தல் வரையிலும் போட்டியிட விண்ணப்பிப்பவர்கள், எந்த அளவு சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்க வேண்டும்” என்கிறார் பிரியங்கா முத்தாய்ப்பாக.

அடடா, இவரைப் பற்றி அறியாமல் இருந்து விட்டோமேயென வருந்துகிறீர்களா?

என்ன செய்வது, நாம் நினைக்கும் பிரபலங்கள் தும்மினால் கூட மருந்துவமனையில் அனுமதி, கவர்னர் நலம் விசாரித்தார் என்று‘பில்ட்-அப்’ கொடுக்கப்பதை, அவர்களின் பேட்டிகள், பேச்சுகள் எல்லாம் ஏதோ இமாலய சாதனை புரிந்துவிட்டவர்கள் ‘ரேஞ்சு’க்கு உயர்த்தப்படுவதை நாம் புறக்கணிக்கத் தவறியதால், சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவோர் வெளிச்சத்திற்கு வராமல் புறக்கணிக்கப்படுவதற்கும் நாமே காரணமாய் அமைந்து விடுகிறோம் என்பதே உண்மை.

Advertisements