“ஊருக்கு போனவன் சங்கதி சாமிக்குத்தான் தெரியும்” என்றிருந்த காலகட்டத்தில், அதையும் தாண்டி சிந்தித்த கிரகம்பெல். “மிஸ்டர் வாட்சன் இங்கே வாருங்கள், நீங்கள் தேவைப்படுகிறீர்கள்” என்று தொலைவில் உள்ள தம் உதவியாளரை அழைத்தார் கம்பி வழியாக! ஆம் தொலைபேசியை கண்டுபிடித்ததாக அறியப்படும் அலெக்சாண்டர் கிரகாம் பெல் தம் உதவியாளர் வாட்சனுடன் பேசத்துவங்கிய அந்த முதல் வார்த்தையுடன் தொடங்கியது தொலைபேசித் தொழில்நுட்பம். இன்று உலக மக்கள் தொகையில் 67 % க்கும் மேற்பட்டோரை ஏறத்தாழ 460 கோடி மக்களை இணைத்துக்கொண்டே இருக்கிறது.

ஏறக்குறைய 135 ஆண்டுகளுக்கு முன்னர் கம்பிகள் வழியாக வெறுமனே குரலை மட்டும் அனுப்புவதற்காக உருவாக்கிய தொழில்நுட்பம்தான் இன்று எத்தனை மாற்றங்கள் கண்டுள்ளது!

கம்பிவழி, கம்பியில்லாமல் என்று தொலைத்தொடர்பு, சாட்டிலைட் தொடர்பு என்றும் வெகு தூர அழைப்பு என்பது மிகச் சாதரணமாகி இப்போது உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிக் கிடக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது.
இந்த பரிணாம வளர்ச்சியே இன்று நம் முன்னே பேசப்படும் 3G சேவையாகும். சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளிநாடுகளில் உபயோகத்திற்கு வந்துவிட்டாலும் நம் நாட்டில் வழக்கம் போலவே கூச்சல்,குழப்பம், அவைஒத்திவைப்பு என நம் சடங்கு சம்பிரதாயங்களையும் தாண்டி சந்தைக்கு வந்திருக்கிறது.
சிவப்புக் கம்பளம் விரிக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது இந்த தொழில்நுட்பத்தில்? பார்க்கலாம்.

‘என்னை விட என் பிள்ளை புத்திசாலி, என பிள்ளையை விட பேரப்பிள்ளை மிக புத்திசாலி’ என்று நாம் நம் தலைமுறைகளைப் போற்றிக்கொள்வது போலவே தொழில்நுட்பமும் தனது தலைமுறையினை பற்றி பெருமிதம் கொள்கிறது. 3G யும் அப்படித்தான். G என்ற ஆங்கிலச்சொல் Generation என்ற வார்த்தையின் முதல்எழுத்தேயாகும். அதாவது தொலைத்தொடர்பு – தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் மூன்றாம் தலைமுறையினை எட்டியுள்ளதை இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.

1980களில் புழக்கத்தில் இருந்த கம்பியில்லா தொலைபேசி (wireless) தொழில்நுட்பம் முதல் தலைமுறையினைச் சார்ந்ததாகும். அதாவது 1G தொழில்நுட்பம். பிறகு வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பம் 96 ம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுவரை அந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் புகைவண்டியில் பயணம் செய்த ஒருவர் வெகு தொலைவில் இருந்த இன்னொருவருக்கு தான் பயணிப்பதைத் தெரிவித்த செய்திகள் 2G தொழில்நுட்பத்தில் உருவான டிஜிட்டல் மொபைல் செய்தி என்று அறிவிக்கப்பட்டு இன்று வரை அந்த தொழில்நுட்பம் பயணித்துக்கொண்டிருக்கிறது.

இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் அதிகமாக குரல் ஒலியின் தரத்திற்கும், குறைந்த அளவிலான டேட்டா பரிமாற்றத்திற்கும் கவனம் செலுத்தப்பட்டது. அதில் வெற்றியும் கண்டதினால் அதிவேக டேட்டா பரிமாற்றம் பற்றி சிந்திக்கத் தூண்டிற்று. பின்பு GPRS ஜெனெரல் பாக்கட் ரேடியோ சர்வீஸ் என்பதுடன் அடுத்த பரிமாண வளர்ச்சி கண்டு GPRS உடன் கூடிய சேவைகள் 2.5G என்று ஆனது.

2.5G தொழில்நுட்பம் வினாடிக்கு 56 கிலோ பைட்ஸ் முதல் 114 கிலோ பைட்ஸ் வரையிலான டேட்டா பரிமாற்றம் அளிக்க வல்லதாக இருந்தது. WAP எனப்படும் வயர்லெஸ் அப்ளிகேஷன் புரோட்டோகால், MMS எனப்படும் மல்டிமீடியா மேசென்ஜிங் சர்வீஸ், மின்னஞ்சல், இணையம் சார்ந்த சிறு பயன்பாடுகளுக்கும் இந்த GPRS பயன்படுகிறது.

2G மற்றும் 2.5G இவற்றின் அடுத்த முன்னேற்றம்தான் 3G எனப்படும் மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் ஆகும்.

3G தொழில்நுட்பம் பல சேவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. செறிவூட்டப்பட்ட, திறன்வாய்ந்த மல்டி மீடியா வசதிகள், குரல்வழிச் சேவை டேட்டா மற்றும் வீடியோ என அனைத்து பிரிவுகளையும் இந்த தொழில்நுட்பத்தில் உள்ளடக்கி கொண்டுவர முடியும்

மிக அகலமான ‘பேண்ட்வித்’ மற்றும் அதனால் கிடைக்கக்கூடிய அதிவேக டேட்டா பரிமாற்றத்தின் காரணமாக செயல்படும் மொபைல் போன், மொபைல் போனாக மட்டுமன்றி இமெயில், பேக்ஸ், வீடியோ கான்பரன்சிங் ஆகியவற்றோடு தங்கு தடையின்றி வெப் பிரவுசிங் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. இதனால் கணினியின் உதவியின்றி உலகின் எந்த ஒரு மூலையில் இருக்கும் ஒருவரோடு மற்றொரு மூலையில் உள்ளவர் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

வேகமாய் இயங்கும் இன்றைய சூழலைக் கருத்தில் நிறுத்தி வடிவமைக்கப்பட்ட 3G தொழில்நுட்பத்தின் தகவல் பரிமாறும் ‘வேகம்’ தான் முன் உள்ள தலைமுறை தொழில்நுட்பங்களிலிருந்து வேறுபட்டு தனித்து நிற்கிறது. இந்த வேகத்திறனின் உதவி பெற்று வீடியோ ஸ்ட்ரீமிங் – மொபைல் டி.வி.யாக மாறி, இன்று கையடக்க தொலைபேசியிலேயே தொலைக்காட்சி!

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த தொழில்நுட்பம் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் வர்த்தகரீதியாக களமிறங்க மிகவும் தாமதமானது. 2001 ம் ஆண்டிலிருந்து உலகின் வெவேறு நாடுகள் தங்கள் நாட்டுமக்களுக்கு இந்த சேவையினை வரிசையாக தர ஆரம்பித்தும் நம் நாட்டில் 2008 ம் ஆண்டில்தான் மூன்றாம் தலைமுறை மொபைல் போன்கள் MTNL எனப்படும் அரசு சார்ந்த நிறுவனத்தின் மூலம் கால்பதித்தது. இந்தியாவில் முதன்முதலில் 3G சேவை MTNL வாயிலாக வந்தபோதிலும் நாட்டின் முக்கியமான நகரங்களில் மட்டுமே இச்சேவை தற்போது அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலமே வழங்கப்படுகிறது.

இதற்கான உள்கட்டமைப்பு, வலையமைப்பு, கோபுரங்கள் மற்றும் உயர்நிலை கருவிகளின் தேவை மற்றும் செலவினங்களால், சேவை தாமதமாகவே நகர்கிறது. பயனாளர்களும் கூட இதன் தொழில்நுட்பத்திற்கேற்றவாறு கைபேசிகளையும் மாற்றியாகவேண்டும். இந்த சேவை வழங்கிட உரிமம் பெறுவதற்கு மிகப்பெரிய அளவில் கட்டணம் விதிக்கப்படுகிறது. மேலை நாடுகளில் இச்சேவைகளை மக்களுக்கு தருவதில் மும்முரம் காட்டிய பல நிறுவனங்கள் பின்னர் கடனில் தத்தளித்தன. எனவே தனியார் நிறுவனக்களின் நுழைவு தாமதமாகலாம்.

மொபைல் போன் பயன்படுத்துவதால் ஆபத்து வருமா? வராதா? என்ற கோணத்தில் உலகின் பல்வேறு நாடுகளும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ள இத்தருணத்தில், சாதாரண தொழில்நுட்பத்தில் இயங்கும் போன்களின் மூலமே குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதை கவனத்தில் கொண்டு, அரசு நாட்டின் பாதுகாப்பு, தனிமனித உரிமை ஆகியவற்றுக்கிடையே தனிக்கவனம் செலுத்த முன்வரவேண்டும்.

பல சிறப்பு வாய்ந்த சேவைகளை உள்ளடக்கிய இந்த 3G சேவை மிகவும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்தப்படுமாயின் அதுவே இந்த தலைமுறையின் பாக்கியம்!

Advertisements